Monday, 23 September 2013

எத்திசைப் பயணம்?















கொடுப்பதுமின்றி
எடுப்பதுமின்றி
புரிதலில் ஊறிய
பேச்சுக்கள்
உனக்குமெனக்குமான
உள்ள வாசல்கள்.

தொடுகையின் நேரத்தில்
சலனமற்ற உனது விரல்கள்
வசந்த காலப் பொழுதின்
புதிய தளிர்களாய்
என்னுள்.

உன் வேர்கள்
உனக்கான இடத்திலேயே
இருப்பதும் உன்
இலைகள் எனக்கான
இடத்தில் நிழல்
தருவதுமே காதலின் சாட்சி.

எனது வாழ்க்கை
பயணத்தில் நமது
பிரிவைக் கடக்கவல்ல
துடுப்பைப் பரிமாறிச்
சென்று கொண்டிருக்கிறாய்

எனக்கெதிரான திசையில்.

Thursday, 19 September 2013

நிறமில்லா மழை


சொல்லாத நிறத்தில் நினைவுகள்
சொல்லாத நிறத்தில் ஒரு மழை...
கருப்பு சட்டமிட்ட ஜன்னலுக்கு வெளியே
நான் வானம் பார்த்து கொண்டு இருந்தேன்
எல்லாரும் சொல்வது போல
அது நீல நிறமாக இல்லை
அதன் நிறம் எனக்கு நினைவில்லாத
ஒரு நிறமாகவே இருந்தது
மேகங்கள் அற்ற வெறுமையான
வானத்தில் சில நட்சத்திரங்கள் இருந்தன
நீ வரும்போதெல்லாம் வானத்தின்
நிறத்திலேயே உடையணிந்து வருவாய்..
பின்னர் பிரிந்து இருந்த ஒரு தருணத்தின்
உரையாடலின் போது
நிறம் என்று ஏதுமில்லை என்றும்
அது ஒரு அடையாளம் என்றும் பேசினோம்...
நான் அடையாளம் கண்டு கொண்ட
நிறங்களில் வானம் இருந்த போதெல்லாம்
கருப்பு சட்டமிட்ட சன்னல்களுக்கு

வெளியே மழை இருந்தது...

Sunday, 1 September 2013

அப்பா...
















கரு கொடுத்து உருவாக்கினாய்
விரல் பிடித்து நடை பழக்கினாய்
கண்டிப்புடன் கல்வி தந்தாய்
பணிவுடன் பாசமும் பொறுமையும் தந்தாய்
நம்பிக்கையுடன் கல்லூரி செல்கையில்
தைரியம் என்ற ஆயுதம் பழக செய்தாய்
தன்னம்பிகையுடன் பணிக்கு செல்லும்போது
தன் கடமை முடிந்ததாய் 
உன் இதயம் ஓய்வு எடுத்தபோதும் 
தவித்து நின்றால் உன் முயற்சிகள் 
தோற்றுவிடும் – என நீ கற்றுதத்த 
பாடங்களின் உதவியுடன் உன் ஆசிர்வாதங்களுடனும்
என் ஆயுளுக்கும் ஓடி கொண்டிருப்பேன்.
உன் மரணம் கூட எனக்கு பாடம் தந்தது,  என் தந்தையே!!!