Friday 30 August 2013

மருந்திட்ட எழுத்து...














கவிதையால் 
கையை சுட்டுக் கொண்டேன். 
காயங்கள் 
ஆறாது வலித்தன. 
எழுத்துகள் 
சில எடுத்து மருந்திட்டேன். 
கற்பனைகளோ 
கண்ணீராய் எட்டி பார்த்தன. 
ஒவ்வொரு கணமும் 
காயங்கள் கரைந்தே வந்தன. 
இருந்த கைகளில் 
இருப்பு ஏதுமின்றி முழுதும் கரைந்தன. 
இப்பொழுது 
காயமுமில்லை. 
கவிதைகளுமில்லை. 

கைகளுமில்லை....

Tuesday 27 August 2013

கனவொன்று கண்டேன்





















கனவொன்று கண்டேன்

அதில் நான் கரையக் கண்டேன்
இப்படி ஒரு கனவென்றால்
எப்படி கண் விழிப்பேன்

கருவறையின் இருட்டில்
சிறிதாய் ஓர் ஒளி கண்டேன்
என் இதயத்தோடு ஒன்றாய்
கூடித் துடிக்கும் இருநாடி கேட்டேன்

வளராத வயிற்றை கூட
மெதுவாய் தடவிப் பார்த்தேன்
கேளாத மழலையில்
அம்மா என்று ஒரு மொழி கேட்டேன்

விடிந்ததும் கலைந்த
என் கனவே
இனி உன்னை சுமக்க

எத்தனை கனவுகள் வேண்டுவேன்...?

இரவில் பெய்த மழை.....


நேற்றிரவு பார்க்கத் 
தவறிய மழை 
கண்ணில் படும் 
நிலப்பரப்பெங்கும் 
தன் ஆளுமையை 
நிரப்பி இருந்தது  
கம்பி வேலியில் 
செடி ,கொடிகளில் 
முத்து முத்தாக... 

ஒரு மரத்தின்
கீழே நின்று 
ஒருமுறை உலுக்கிவிட்டு 
லேசாய் 
நனைந்து கொண்டபோது 
ஈரம் சுமந்த மனம் 

ஏன் லேசானது?

Monday 26 August 2013

அணு அணுவாய்
















இங்கே இயல்பாயிருத்தல்
இயலாதெனினும்
அதை விடுத்து
பறந்துபோகும் ஆசையோ
பிறிதொரு வண்ணச்சிறகுகள்
பற்றிய
கனவுகளோ ஏதுமில்லை

காற்றில் கரையும்
உயிரை
தேடித்தேடி
சேகரிக்கிறேன்
அள்ளிக்கொஞ்சவோ

அணு அணுவாய்க்கொல்லவோ…

Friday 23 August 2013

கதை...











எனக்கொரு கதைச் சொல்லு
என்றாள் அமுதா.
கதையில்..
ஏழு கடல்கள் இடியுடன் கூடிய புயல் தீ கக்கும் டிராகன் இவர்களுடன் இருக்கட்டும் அரக்கனைப் பரிகாசம் செய்யும் ஒரு சின்னப் பச்சைக்கிளி. முடிவில்லாத சிக்கலான பாதை வெளிவரமுடியாமல் ஒவ்வொரு படியிலும் தடைக்கற்கள் பயப்படவில்லை. இந்த மாதிரிக் கதைகளை எனக்குத் தெரியும்.
எல்லா கதைகளிலும் எப்போதும் கடைசியில் இனிமையாக வாழ்ந்ததாக முடிவு வரும் என்று.

ஓடம் அழைக்கிறது...















ஒரு தீவு
ஒரு நிலவு
ஒற்றை மரம்
கரையில் ஓடம்

காத்திருக்கிறேன்
நான் மட்டும்

கலைத்துப் போகும்
காற்றைப் போல்...
என் முடிஅலையும்
உன் கைகளுக்காகவே

பின்னி விடும்
என் கூந்தலையும், என்னையும்
கோர்த்துக்கொள்
உன் விரல்களில்

நான்
தீட்டி வந்த கண்மை...
என்னை பின்னிப்போடும்
உன் விழிகளுக்காகவே

வட்ட நிலவொளியில்
வையகம் மறந்திடலும்
கவிதை விரல்களால்
மெய்க் காவியம் எழுதிடலும்
ஓசையற்ற இசைப் பயணம்

ஓடம் அழைக்கிறது
வா போய் வரலாம்


அக்கரைக்கு...